HomeTop newsஎண்ணெய் விலை 80 டொலராக நீடித்தால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் - மத்திய வங்கி ஆளுநர்

எண்ணெய் விலை 80 டொலராக நீடித்தால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் – மத்திய வங்கி ஆளுநர்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இந்த ஆண்டின் இறுதி வரை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 80 அமெரிக்க டொலர் மட்டத்தில் நீடித்தால், இலங்கையின் பணவீக்கத்தை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் விலை இந்த ஆண்டின் இறுதி வரை சுமார் 80 டொலர் மட்டத்தில் காணப்பட்டால், பொருளாதார நிலைமையை கட்டுப்படுத்த முடியும் எனக் குறிப்பிட்ட அவர், எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அது இலங்கைக்கு சவாலாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய எரிசக்தி விலையேற்றத்தால் பணவீக்கம் மற்றும் உள்ளூர் நாணயத்தின் மீதான அழுத்தங்களை இலங்கை எதிர்கொண்டு வரும் நிலையில் மத்திய வங்கி ஆளுநர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் பணவீக்கம் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும், அடுத்த ஆண்டிலும் மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி மே மாதத்தில் மேற்கொண்ட பணவியல் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் பொருளாதார நிலைமையை சீர்படுத்துவதற்கு பங்களித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்தாலும், கடுமையான நிபந்தனைகள் மற்றும் அதிக விலைகள் காரணமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படவில்லை என்றும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4 முதல் 5 சதவீதம் வரையான மிதமான மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட இறையாண்மைக் கடன் நெருக்கடியைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இணைந்த பின்னரும் இலங்கை பொருளாதார மீட்சிப் பாதையில் தொடர்ந்து பயணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நான்கு வருட திட்டம் 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் அடுத்தகட்ட மீளாய்வு இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு பங்குச் சந்தைக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் மத்திய வங்கி ஆளுநர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு விஜயம் செய்துள்ள நிலையிலேயே இந்த நேர்காணல் இடம்பெற்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular