மத்திய கிழக்கில் ஈரானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது பாரிய இராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கப் படைகள் தயாராக இருந்த போதிலும், பிராந்திய நட்பு நாடுகளின் கோரிக்கைகள் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை ஈரான் உடனடியாக மறுத்துள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், அமெரிக்காவுடன் எந்தவொரு நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈரான் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஓமன் நாட்டின் வழிகாட்டுதலின் கீழ் ஹார்முஸ் நீரிணையில் தற்காலிக பாதுகாப்பான கடல்வழிப் பாதையை உருவாக்குவது தொடர்பில் மட்டுமே ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீக்கப்படும் வரை தற்போதைய நிலைமையில் மாற்றம் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பேச்சுவார்த்தை தொடர்பான அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 82.18 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளதுடன், இது ஒரே நாளில் 5 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியாகும். இதன் தாக்கம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எரிபொருள் மற்றும் எரிவாயு சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) கீழ், ‘USS Abraham Lincoln’ மற்றும் ‘USS George HW Bush’ உள்ளிட்ட இரு பாரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரானிய கடற்பகுதிகளுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மறுபுறம், ஏமனின் ஹூதி அமைப்பினர் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள பாப் அல்-மந்தேப் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை பாதித்துள்ள நிலையில், சர்வதேச கடல்வழி வர்த்தகம் மேலும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.
