கணக்காய்வு செய்யும் போது பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தினாலேயே பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் இருந்து தான் பணத்தை எடுத்ததாக உதித் லொக்கு பண்டார தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பெருந்தொகை பணம் மீள பெறப்பட்டுள்ளமை குறித்த தகவல் வெளியான பின்னர், பிரதமரின் பாதுகாப்பு பிரதானி கேட்ட போதே உதித் லொக்கு பண்டார இதனை கூறியுள்ளார்.
கணக்காய்வு செய்யும் போது பிரச்சினை ஏற்படும் என்பதால், நான் அந்த பணத்தை மீள பெற்று தனியாக முதலீடு செய்தேன். ஒரு கோடியே 60 லட்சம் வரை அந்த முதலீட்டில் இருக்கும்.
மீதம் இருந்த சில மில்லியன் ரூபாய்கள் ஹோட்டல்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் சார்பில் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு களியாட்டங்களுக்காக செலவிட்டேன் என உதித் லொக்கு பண்டார குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை உதித் லொக்கு பண்டார அண்மையில் 25 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாக கூறப்படுகிறது. உதித் லொக்கு பண்டார பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற விவகார செயலாளராக பணியாற்றி வந்தார்.