கண்டி மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்து வசதிகளை நவீனப்படுத்தவும் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் கலகெதர வரை விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, குறித்த பாதையைக் கன்னொருவ வரை இணைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கலகெதர – கட்டுகஸ்தோட்டைப் பாலத்தை அகலப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், பேராதனைப் பாலத்திற்கு அருகில் இரண்டு மேம்பாலங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில், பழமையான பேராதனைப் பாலத்தைப் புனரமைக்கும் பணிகள் இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், பொது மக்களின் பயண வசதிகளை நவீனமயப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
