வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை ஹொரணை விசேட குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, சந்தேக நபரான பெண் 20 இலட்சம் ரூபாய் மோசடி செய்தமை தொடர்பில் ஹொரணை விசேட குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, நேற்று (26) காலை அலுபோமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹொரணை விசேட குற்றவியல் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ஹொரணை விசேட குற்றவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
