HomeTop newsபுற்றுநோய் முதல் மலட்டுத்தன்மை வரை - உணவோடு சேர்த்து நாமே உடலுக்குள் செலுத்தும் நச்சு

புற்றுநோய் முதல் மலட்டுத்தன்மை வரை – உணவோடு சேர்த்து நாமே உடலுக்குள் செலுத்தும் நச்சு

உணவு தயாரித்தல் மற்றும் உணவு உட்கொள்ளும் நடவடிக்கைகளில் தரநிர்ணயம் இல்லாத பிளாஸ்டிக் உபகரணங்களை பயன்படுத்துவது மாரடைப்பு, புற்றுநோய், ஹோர்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு காரணமாக அமையக்கூடும் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சுற்றுச்சூழல், தொழில்சார் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான, நீண்டகாலமாக பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்துவதால் உடல்நல பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

கொதிநீரை பிளாஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்துதல், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவுப் பெட்டிகளை தொடர்ச்சியாக பயன்படுத்துதல் போன்ற பழக்கவழக்கங்கள் உடலுக்குள் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ துகள்கள் மற்றும் பிபிஏ (BPA) போன்ற நச்சு இரசாயனங்கள் நுழைவதற்கு வழிவகுப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த நச்சுப் பொருட்கள் காலப்போக்கில் இரத்த நாளங்கள் வழியாக மூளை, கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளில் படிந்து அவற்றின் செயற்பாடுகளை பாதிக்கக்கூடும் என்றும், இரத்த நாள அடைப்பு காரணமாக மாரடைப்பு அபாயமும் அதிகரிக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹோர்மோன் கோளாறுகள், மலட்டுத்தன்மை, தொற்றா நோய்கள், நீண்டகால அழற்சி நிலைகள் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உருவாகும் அபாயமும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சமையல் மற்றும் உணவு சேமிப்பிற்காக மண்பாண்டங்கள், உலோகப் பாத்திரங்கள், கண்ணாடி மற்றும் செராமிக் உபகரணங்களைப் பயன்படுத்துவது சிறந்த மாற்று வழியாகும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular