இலங்கை அதிபர் சேவை அதிகாரிகள் நீண்டகாலமாக முன்வைத்து வந்த சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்கும் வகையில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 03/2014 (I) என்ற புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
2026 மே 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் இந்த புதிய சம்பளத் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பளக் கணிப்பீட்டில் புதிய மாற்றம் இதுவரை நடைமுறையில் இருந்த 03/2014 சுற்றறிக்கையின் 01ஆம் பிரிவும் அதனுடன் தொடர்புடைய உப பிரிவுகளும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதற்குப் பதிலாக, நிறுவனக் கோவையின் முதலாம் தொகுதி, VIIஆம் அத்தியாயத்தின் 05ஆம் பிரிவின் கீழ் புதிய ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய திருத்தங்களின்படி, அதிபர் சேவை அதிகாரிகளின் சம்பளக் கணிப்பீடு இனி “பதவியுயர்வு” அடிப்படையில் மேற்கொள்ளப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்டகாலமாக நிலவிய சம்பள முரண்பாடுகளைத் தவிர்க்க முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
பதவியுயர்வுக்கான விசேட சலுகைக் காலம்
சம்பளத் திருத்தங்களுடன், அதிபர் சேவையின் பதவியுயர்வு நடைமுறைகளில் ஏற்பட்டிருந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 2009 நவம்பர் 13ஆம் திகதி இலங்கை அதிபர் சேவையின் 3ஆம் வகுப்பில் இணைக்கப்பட்ட அதிகாரிகளின் Grade I வரையிலான பதவியுயர்வு செயல்முறையை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்காக விசேட சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதவியுயர்வுக்குத் தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில், அதிபர் சேவை அதிகாரிகளுக்கு 2027 டிசம்பர் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
