அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை விட அதிகமாக 75 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் வழக்கு இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி தலைமையிலான சட்டத்தரணிகள் குழு, வழக்கின் சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
விசாரணையின் பின்னர், மேலதிக சாட்சி விசாரணைகளை ஜூன் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2010 முதல் 2014 வரையிலான காலப்பகுதியில், தனது சட்டபூர்வ வருமானத்தை மீறி 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை குவித்ததன் மூலம் இலஞ்ச ஊழல் சட்டத்தை மீறியதாக குற்றஞ்சாட்டி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அவர்களுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
