HomeTop newsஎரிபொருள் விலை குறைய வாய்ப்பே இல்லை - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை குறைய வாய்ப்பே இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு

உலக சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டால், எதிர்வரும் எரிபொருள் விலை திருத்தத்தின் போது விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஓரளவு குறைவு காணப்பட்டாலும், மத்திய கிழக்கு போருக்கு முன்னர் காணப்பட்ட விலைகளை விட தற்போதைய விலைகள் இன்னும் அதிகமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தினத்திற்கான (29) உலக சந்தை எரிபொருள் விலைகள் இன்று பிற்பகலுக்குள் தீர்மானிக்கப்படும் என்றும், அதன் பின்னர் நிலைமைகளை ஆய்வு செய்து உள்நாட்டு எரிபொருள் விலை தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், எரிபொருள் விலை தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், இது குறித்து பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் அடிப்படையில், எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு இடம்பெறுமா அல்லது தற்போதைய விலையே தொடருமா என்பது பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நேற்று (28) ‘WTI’ ரக மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அதில் 89,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் 31ஆம் திகதியளவில் ‘மெர்பன்’ ரக மசகு எண்ணெய் ஏற்றிய மற்றொரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும், அதில் 95,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular