Homeசெய்திகனவரல்ல தோட்டத் தொழிலாளர்களின் பணிப் பகிஷ்கரிப்பு நிறைவு!

கனவரல்ல தோட்டத் தொழிலாளர்களின் பணிப் பகிஷ்கரிப்பு நிறைவு!

8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, நமுனுகுலை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான கனவரல்ல தோட்டத் தொழிலாளர்களினால் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு, தொழிற்சங்கங்களின் தலையீட்டினால் இன்றைய தினம் சுமுகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

கனவரல்ல தோட்ட காரியாலயத்தில் இன்று நடைபெற்ற நிர்வாகத்தினருக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பலனாக இந்தத் தீர்வு எட்டப்பட்டது.

இதன்போது, தொழிலாளர்களின் 8 கோரிக்கைகளில் 6 கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதாகவும், ஏனைய 2 கோரிக்கைகளை நமுனுகுலை பெருந்தோட்ட நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் தோட்ட நிர்வாகம் உறுதியளித்தது.

நிர்வாகத்தின் இந்த இணக்கப்பாட்டைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் தமது போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்தனர்.

முன்வைக்கப்பட்ட 8 அம்சக் கோரிக்கைகள்
தோட்டத் தொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட பிரதான கோரிக்கைகள் பின்வருமாறு:

கோரிக்கை 01: பராமரிப்பின்றி காடுகளாக மாறியுள்ள தேயிலைத் தோட்டங்களை உடனடியாகச் சீரமைத்தல்.

கோரிக்கை 02: கை காசு தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 80 ரூபாய் வழங்கப்பட வேண்டும்.

கோரிக்கை 03: கை காசு தொழிலாளர்களுக்கு தேயிலைத்தூள் வழங்கப்பட வேண்டும்.

கோரிக்கை 04: தோட்ட வாகனங்களுக்கு, குறித்த தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்களையே சாரதிகளாக பணியில் அமர்த்த வேண்டும்.

கோரிக்கை 05: கனவரல்ல தோட்ட நிர்வாகத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

கோரிக்கை 06: தோட்டக் கூட்டுறவு சங்கத்தில் காணப்படும் பணத்தை மீண்டும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.

கோரிக்கை 07: சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒரு வருடத்திற்கு மேல் பணிபுரியும் நபருக்கு நிரந்தர வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும்.

கோரிக்கை 08: தோட்டக் குடியிருப்பு லயன்களுக்குக் கூரைத்தகடு மாற்றித் தரப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தையில் பங்கேற்றோர்
குறித்த பேச்சுவார்த்தையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் மாநில இயக்குநர் பி.சிறிதர், பசறை மாவட்ட பிரதிநிதி ஏ.கோகிலவாணி, பசறை பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா சுதாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஜோதி வேல் தியாகராஜா கலந்து கொண்டதுடன், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதித் தலைவர் முத்துக்குமார், நிர்வாகச் செயலாளர் விஜயகுமார், பசறை மாநில இயக்குநர் நல்லையா ஆகியோரும் பங்குபற்றினர். மேலும், குறித்த தொழிற்சங்கங்களின் காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் கனவரல்ல தோட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

R.T. பசறை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular