Homeசெய்தி"மலையக மகிழ்ச்சி": பதுளையில் 34 புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா!

“மலையக மகிழ்ச்சி”: பதுளையில் 34 புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா!

“மலையக மகிழ்ச்சி” திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் இரண்டு புதிய வீட்டுத் திட்டங்களுக்கு நேற்று (26) அடிக்கல் நாட்டப்பட்டது.

மண்சரிவு அபாயம் மிகுந்த பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாக்கும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் தலைமையில், பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட நாயபெத்த தோட்டத்திலும், ஹல்தமுல்லை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மல்வத்தை பகுதியிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட நாயபெத்த தோட்டத்தில் மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாகியுள்ள 11 குடும்பங்களுக்கும், ஹல்தமுல்லை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மல்வத்தை பகுதியில் மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாகியுள்ள 23 குடும்பங்களுக்கும் இந்த புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்த 34 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் 108 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிடத் திட்டமிட்டுள்ளது. ஒரு வீட்டு அலகை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் 28 இலட்சம் ரூபாயும், உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 4 இலட்சம் ரூபாயும் செலவிடவுள்ளது. அத்துடன், இந்தப் பயனாளிகளுக்கு 10 பேர்ச் காணியும் வழங்கப்படவுள்ளது.

நீண்டகாலமாக மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தரமான, பாதுகாப்பான மற்றும் கௌரவமான வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த “மலையக மகிழ்ச்சி” திட்டத்தின் நோக்கமாகும். மேலும், மலையக மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்துதல் மற்றும் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இயற்கை அனர்த்த அபாயங்களைக் குறைத்தல் என்பன அரசாங்கத்தின் அடிப்படை கொள்கைகளாகும்.

அந்த இலக்கை அடைவதற்காக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமிக்க நடவடிக்கையாக இந்தத் திட்டத்தைக் கருதலாம்.

இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திர பண்டார மற்றும் அம்பிகா சாமிவேல் உள்ளிட்ட உள்ளூராட்சி அரசியல் பிரதிநிதிகள், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், பதுளை மாவட்ட செயலாளர் சுனில் கலகம, பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிக் குடும்பங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular