Homeஉலகம்அமைதி பேச்சு இப்போதைக்கு இல்லை: ஈரான் தெரிவிப்பு!

அமைதி பேச்சு இப்போதைக்கு இல்லை: ஈரான் தெரிவிப்பு!

அமெரிக்காவுடன் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

தெஹ்ரானில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி,

“பேச்சுவார்த்தையை, ராஜதந்திர முயற்சிகளை முன்னெடுப்பதில் அமெரிக்கா தீவிரமாக இல்லை. பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறும் அமெரிக்கா, அதற்கான செயல்முறையை முன்னெடுப்பதில் தீவிரம் காட்டுவதில்லை. அதன் நடத்தைகள் இதையே உணர்த்துகின்றன.

ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியது, ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டிருப்பது, லெபனானில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதை தாமதப்படுத்துவது ஆகிய அனைத்தும் போர் நிறுத்தத்தின் தெளிவான மீறல்கள்.

அத்துடன், அச்சுறுத்தும் சொல்லாடல்களை அமெரிக்கா மேற்கொள்கிறது. அமெரிக்கா தனது நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றுவதோடு, அளவுக்கு அதிகமான கோரிக்கைகளை முன்வைக்கிறது.

ஹார்முஸ் நீரிணையில் மற்றவர்களுக்கு தடையற்ற பாதுகாப்பை எதிர்பார்க்கும் அதேவேளையில், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது. எனவே, இப்போதைக்கு புதிய பேச்சுவார்த்தைகளில் ஈரான் ஈடுபடாது” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டிருப்பது அமைதி பேச்சுவார்த்தைக்கு மிகப் பெரிய தடையாக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உடன் தொலைபேசியில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular