Homeஉள்நாடுஐ.எம்.எவ். தாளத்துக்கேற்ப ஆடாதீர்: அரசுக்கு சஜித் எச்சரிக்கை!!

ஐ.எம்.எவ். தாளத்துக்கேற்ப ஆடாதீர்: அரசுக்கு சஜித் எச்சரிக்கை!!

“சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணியாமல், நாட்டின் தொழிற்சாலைகளையும் உள்நாட்டுத் தொழில் முயற்சிகளையும் பாதுகாப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை அரசு முன்னெடுக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீதப் பங்களிப்பை வழங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் முதல் தற்போதைய மத்திய கிழக்கு நெருக்கடி வரை தொடர்ச்சியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், ஐ.எம்.எவ். நிபந்தனைக்கமைய ‘செஸ்’ வரியை நீக்க அரசு எடுக்கும் முயற்சியானது உள்நாட்டுத் தொழில்துறையின் பாதுகாப்பை முழுமையாகச் சீர்குலைக்கும்.

பராட்டே சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், கடன் சுமையில் சிக்கியுள்ள தொழில்முனைவோருக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் அவர்களுக்கான கடன் மறுசீரமைப்பு கூடச் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் இத்துறையினர் பாரிய இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஏற்றுமதித் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக, பிரண்டிக்ஸ், மாஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இந்தியாவிற்கு நகர்வதால், இலங்கையில் பல இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்றுமதித் துறையை வலுப்படுத்தவும், உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச நிதியத்தின் சொற்கேட்டுச் செயல்படுவதை விடுத்து, எமது நாட்டின் தொழிற்சாலைகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க முன்வர வேண்டும்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular