வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறையைத் திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (13) இடம்பெற்ற “சுற்றுலாவுக்கு அனுமதி“ என்ற தொனிப்பொருளிலான ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நாட்டுக்கு வெளிநாட்டு நிதி கிடைக்கும் பிரதான மூல காரணிகளில் சுற்றுலாத்துறை மூன்றாவது இடத்தில் காணப்பட்டது. ஏனைய நிதி மூலங்களுடன் ஒப்பிடுகையில், சுற்றுலாத்துறையில் இருந்தே நாட்டுக்கு நிகர வருமானம் கிடைத்தது என சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையை முகாமைத்துவத்துக்கு உட்படுத்தி, சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள அரச, அரச சார்பற்ற மற்றும் வெளிநாட்டுத் தூதுவர் சேவைகளைத் தொடர்புபடுத்தி, நேர்மறையான அணுகுமுறையுடன் பொதுவான இலக்கை நோக்கிச் செயற்பட வேண்டியதன் அவசியம் இனங்காணப்பட்டுள்ளது.
“புதிய திட்டங்கள் மற்றும் உத்திகளின்படி, 2030ஆம் ஆண்டளவில் நாடு 07 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கவுள்ளதுடன், அதன் மூலம் தமது அமைச்சு பத்து பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது” எனவும் அவர் கூறினார்.
“இலங்கை தனது இலக்கை அடைய, உலகளாவிய தரநிலைகள் மற்றும் அளவுகோல்களைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அனைத்து மக்களும் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திருமதி கிமாலி பெர்ணான்டோ தெரிவித்தார்.
இலங்கையானது, கொவிட் தொற்றுப் பரவலை விஞ்ஞான ரீதியாக முகாமை செய்து வருவதோடு, ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, சுற்றுலாப் பயணிகளின் வருகை இலங்கையில் அதிகரித்துள்ளதைக் கண்டுகொள்ள முடியும். எதிர்பார்த்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கு, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையானது திட்டமிட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்றும் அதன் தலைவர் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பொலிஸாரால் நடத்தப்படும் சுற்றுலா பொலிஸ் சேவையைப் புதிய வடிவில் மேற்கொள்வதற்காக அதன் பிரிவுகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.