Homeஉள்நாடுசெம்மணி புதைகுழி: சுயாதீன நடவடிக்கைக்கு இடமளிப்பு!

செம்மணி புதைகுழி: சுயாதீன நடவடிக்கைக்கு இடமளிப்பு!

செம்மணி விவகாரத்தில் அரசாங்கம் எவ்வித கையடிப்புகளையும் மேற்கொள்ளவில்லை. சுயாதீனமாகவே நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

“ செம்மணி புதைகுழி மட்டும் அல்ல மேலும் சில இடங்களில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை தொடர்பில் பக்கச்சார்பற்ற நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதற்கு தேவையான நிதி, ஆளனி வளம் என்பன அரசால் வழங்கப்படுகின்றது.

செம்மணி புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை மக்களுக்கு அடையாளம் காண்பதற்கு காண்பிக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் அவ்வாறு நடக்கவில்லை. இது விடயத்தில் நாம் கையடிக்கவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு கண்காணிப்பதற்கு இடமளித்தோம்.

இதன் பின்னர் நீதிமன்றம் வழங்கும் கட்டளைகளுக்கமைய நடவடிக்கை இடம்பெறும். நாம் எவ்வித கையடிப்புகளையும் மேற்கொள்ளவில்லை. எமது ஆட்சி வந்த பின்னர் வடக்கிலும், தெற்கிலும் நினைவேந்தலுக்கு இடமளிக்கப்பட்டது. நினைவேந்தல் உரிமையை ஏற்றோம்.

ஆனால் பிரிவினைவாத அமைப்புகளின் சின்னம், அடையாளம் என்பவற்றை பயன்படுத்த முடியாது.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

அதேவேளை, நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் குறுகிய காலப்பகுதிக்குள் இராணுவ காவலரண்கள், பொலிஸ் காவல் அரண்கள் நீக்கப்பட்டன. வடக்கிலும் பல பகுதிகளில் இருந்த பொலிஸ் காவல் அரண்கள் நீக்கப்பட்டன. 34 வருடங்களுக்கு பிறகு பலாலி வீதி திறக்கப்பட்டது. பொது போக்குவரத்து சேவையும் அப்பகுதியில் இடம்பெறுகின்றது.

போர் காலத்தில் போர் நடவடிக்கைக்காக காணிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. உரிய திட்டமிடலுக்கமைய அவை விடுவிக்கப்பட்டுவருகின்றன.

தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியமான இராணுவ முகாம்கள் இயங்கும். ஏனையவை அடையாளம் காணப்பட்டு, காணிகள் விடுவிக்கப்படும். அதற்குரிய நடவடிக்கை இடம்பெறும். காணிகளை இனங்காணும் வகையிலேயே வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. கால அவகாசம் போதாது என்றார்கள். இதனையடுத்து அந்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றோம்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவர்களுக்குரிய காணிகளை வழங்குவதே எமது நோக்கம். குறுகிய காலப்பகுதிக்கள் இதற்குரிய நடவடிக்கையை நிறைவுசெய்ய எதிர்பார்க்கின்றோம் என வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular