18 வயதிற்கு கீழ்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசியை வழங்குவதை கட்டாயமாக்குவதனூடாக அடிப்படை உரிமை மீறப்படுவதாக தீர்மானிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
வைத்தியர்களான தாரணி ராஜசிங்கம், ரஞ்சித் சேனானி செனவிரத்ன, நிர்மலால் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க, அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் தேவையான விடயங்களை மன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் போது அவர்களின் பெற்றோர்களது விருப்பத்தையும் பெற்றுக்கொள்வது பொருத்தமானது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர், சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட தரப்பினர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.