Homeஉலகம்பாதுகாப்பு முதலீடுகளை அதிகரிக்க நேட்டோ முடிவு!

பாதுகாப்பு முதலீடுகளை அதிகரிக்க நேட்டோ முடிவு!

இராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செலவீனங்களை அதிகரிப்பதற்கு நேட்டோ அமைப்பு முடிவு செய்துள்ளது.

‘நேட்டோ” எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த, 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

ஐரோப்பாவில் உள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், இராணுவத்துக்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என, நேட்டோ நாடுகளுக்கு, அமெரிக்கா சமீபத்தில் ஆலோசனை கூறியது.

ஐரோப்பாவைத் தவிர மற்ற பிராந்தியங்களில் உள்ள பாதுகாப்பு பிரச்னைகள் தொடர்பாக அமெரிக்கா தற்போது தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் ‘நேட்டோ’ அமைப்பின் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் , கனடா பிரதமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆஸ்திரேலியாவின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் பங்கேற்றிருந்தார்.

இதன்போது தனிப்பட்ட மற்றும் கூட்டுக் கடமைகளை உறுதி செய்ய 2035ம் ஆண்டிற்குள் முக்கிய பாதுகாப்பு தேவைகள் மற்றும் ராணுவம் தொடர்பான செலவினங்களுக்காக ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில 5 சதவீதம் முதலீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் இந்த அமைப்பில் உள்ள எந்த ஒரு நாட்டை தாக்கினாலும், அது அனைத்து உறுப்பு நாடுகள் மீதான தாக்குதல் என கருதுவது எனவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதேவேளை, தமது நாட்டு பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிப்பது தொடர்பில் ஆஸ்திரேலியாவும் அவதானம் செலுத்தியுள்ளது. அத்துடன், ஐரோப்பாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடும் விவகாரமும் பரிசீலனை மட்டத்தில் உள்ளது.

நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற ஆஸ்திரேலிய பிரதமர் கனடா, பிரிட்டன், நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்களுடன் பேச்சு நடத்தினார். நேட்டோவின் செயலாளருடனும் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், உக்ரைன் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது, அந்நாட்டுக்கான ஆஸ்திரேலியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular