Homeஉள்நாடுவடக்கு, தெற்கு என்ற வேற்றுமை இனி கிடையாது; அந்த காலம் முடிந்தது

வடக்கு, தெற்கு என்ற வேற்றுமை இனி கிடையாது; அந்த காலம் முடிந்தது

வடக்கு, தெற்கு என்ற வேற்றுமை நாட்டில் கிடையாது எனவும் அவ்வாறு சிந்தித்த காலம் முடிவடைந்து விட்டதாகவும் கைத்தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், உப்பு பிரச்சினை முடிவடைந்து விட்டதாக தெரிவித்த அமைச்சர், எதிர்க்கட்சிகள் இனி வேறொரு விடயத்தை தமது அரசியல் பிரச்சாரத்துக்காக தேடிக்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

அதேபோன்று, வடக்கு உப்பை தெற்குக்கு அனுப்பக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஒரு தரப்பினரை தவறாக வழிநடத்தியுள்ளார் என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஆனையிறவு உப்புத் தொழிற்சாலையின் உயர் பதவிக்கு கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவரை நியமிக்க வேண்டாம் எனவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறையே தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக இந்த விடயத்தைப் பற்றியே கடந்த சில நாட்களாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

உப்பு உற்பத்தி இயற்கை காரணங்களுடன் தொடர்பு பட்டது. காற்று, சூரியஒளி மற்றும் நீர் ஆகிய இயற்கை அது அம்சங்களுடன் தொடர்புடையது.

கடந்த ஆறுமாத காலமாக நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. உப்பு உற்பத்தி தட்டுப்பாடு கடந்த டிசம்பர் மாதமே ஆரம்பமாகி விட்டது. முறையான திட்டங்களினால் இதனை நாம் முகாமைத்துவம் செய்தோம்.

சரியான நேரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்காதிருந்திருந்தால் கடந்த ஏப்ரல் மாதமே உப்புக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்திருக்கும். அதன்படி, நுகர்வு மற்றும் உற்பத்தி ஆகியவற்றுக்கிடையிலான பற்றாக்குறையை கருத்திற் கொண்டு உப்பு இறக்குமதிக்கு தனியார் துறையினருக்கு தற்காலிக அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கமைய மூன்று தனியார் நிறுவனத்தினர் உப்பினை இறக்குமதி செய்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட உப்பு தூய்மையாக்கப்பட்டு அவை சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன. ச.தொ.ச விற்பனை நிலையம் மற்றும் சுப்பர் மார்க்கெட்டுகளில் 120 ரூபாவுக்கே உப்பு விற்பனை செய்யப்படுகிறது.

உப்பு மாபியாக்களுடன் தொடர்புடைய சில ஊடகங்களே உப்பு விலை அதிகரித்துள்ளதாகவும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக குறிப்பிடுகின்றன. உப்புத் தட்டுப்பாடு பற்றி பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள மொழியில் ஒன்றையும், ஆங்கில மொழியில் வேறொன்றையும், தமிழில் ஒன்றையும் தெரிவிப்பது விந்தையாக உள்ளது என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular