முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார் என்பது தொடர்பில் தகவல் இல்லை எனவும், அவரை கைது செய்வதற்குரிய அத்தனை முயற்சிகளும் இடம்பெறுகின்றன எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாட்டில் உள்ளாரா அல்லது தப்பியோடிவிட்டாரா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியவை வருமாறு,
” நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய நாம் செயல்பட்டுவருகின்றோம். அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் விமான நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறினால் சாதாரண சந்தேக நபர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பார்களோ அவ்வாறான நடவடிக்கையே முன்னாள் பொலிஸ்மா அதிபர் விடயத்திலும் இடம்பெறுகின்றது. அவரை கைது செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என தகவல் இல்லை. பயணத்தடை இருப்பதால் சட்டப்பூர்வமாகவும் செல்லமுடியாது.” – என்றார்.
