HomeBig Storyஉள்ளாட்சி தேர்தலை பிற்போட எதிரணிகள் முன்வைக்கும் 4 காரணிகள் இதோ...!

உள்ளாட்சி தேர்தலை பிற்போட எதிரணிகள் முன்வைக்கும் 4 காரணிகள் இதோ…!

தமிழ், சிங்கள புத்தாண்டு முடிவடைந்த பின்னர் உள்ளாட்சிசபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம், எதிரணிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர், சாதாரண தரப்பரீட்சை, வைப்புத்தொகை மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு ஆகிய 4 விடயங்களை மையப்படுத்தியே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவு உறுப்பினர்களுக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 13 இற்கு மேற்பட்ட கட்சிகளின் இணக்க கடிதமும் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக ஏற்கனவே செலுத்தப்பட்ட கட்டுப்பணம் மீள செலுத்தப்படவில்லை. இதனால் கட்டுப்பணம் செலுத்துவதற்குகூட நிதி நெருக்கடி உள்ளது. எனவே, கட்டுப்பணத்தை மீள செலுத்திய பின்னரே தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடர் 17 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம்வரை நடைபெறவுள்ளது. இதற்கிடையில் தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றால் அது பெரும் நெருக்கடியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல சாதாரணதரப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அமைதியானதொரு சூழ்நிலை இருக்க வேண்டும் எனவும், புத்தாண்டுக்கு இடையில் தேர்தலை நடத்துவது அரச அதிகாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் எதிரணிகளால் தேர்தல் ஆணைக்குழுவிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ நாம் எமது தரப்பு கோரிக்கையை முன்வைத்து, அதற்குரிய நியாயத்தை எடுத்துரைத்தோம். எனவே, பொருத்தமானதொரு திகதியை தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

‘ நாம் தேர்தலுக்கு அஞ்சுவதால் அதனை பிற்போட கூறவில்லை. தேர்தலை நடத்தவதற்கு பொருத்தமான சூழல் இருக்க வேண்டும். அந்த விடயத்தையே சுட்டிக்காட்டினோம். தேர்தலை நடத்துமாறு நாமே நீதிமன்றத்தைக்கூட நாடி இருந்தோம்.” – எனவும் அவர் கூறினார்.

உள்ளாட்சிசபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை அறிவிப்பதற்காக நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது.

ஏற்கனவே பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துசெய்யும் மேற்படி சட்டமூலத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி நிறைவேற்றிக்கொள்வதற்கும், ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தலை நடத்தவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தமிழ், சிங்கள புத்தாண்டு முடிவடைந்த பிறகு தேர்தல் குறித்த அறிவித்தலை விடுக்குமாறு கோரப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular