Homeஉள்நாடுஅநுர அரசே தமிழருக்கு நீதி வேண்டும்: சிறீதரன் எம்.பி. வலியுறுத்து

அநுர அரசே தமிழருக்கு நீதி வேண்டும்: சிறீதரன் எம்.பி. வலியுறுத்து

தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு நீதியை வழங்க இந்த அரசு முன்வரவேண்டும் எனத் தமிழ் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – தையிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயர் பாதுகாப்பு வலயம் எனக் குறிப்பிட்டு அந்தப் பகுதிக்குள் மக்களைப் போக விடாமல் தடுத்துக் கொண்டு அந்தப் பகுதியில் இரகசியமாக – அதிலும் கொரோனாத் தொற்றுநோய் பரவிய காலத்தில் இராணுவத்தினரைப் பயன்படுத்தி இந்த விகாரையை – அதுவும் தமிழ் மக்களின் காணிகளிலே அமைத்திருப்பது மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகும்.

சட்டம் என்பது இந்த நாட்டில் நீதியானதாக சமமானதாக இருந்தால் அது எல்லோருக்கும் உரியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் பல தடவைகள் சொல்லியிருக்கின்றோம்.

இந்த இடம் எங்களுடைய பூர்வீக நிலம். இந்த விகாரையை மையப்படுத்தி இதனைச் சுற்றி இப்போது 14 ஏக்கருக்கு மேற்பட்ட காணியை மீண்டும் கபளீகரம் செய்ய முயற்சிப்பது மிகப் பெரிய அராஜகம்.

இந்த அராஜகங்களுக்கு எதிராகத்தான் காணி உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு தங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றார்கள்.

இந்தப் போராட்டம் பல பேரின் முயற்சியாலும், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற இந்த நேரத்தில் இன்னும் இந்தப் போராட்டங்கள் விரிவடைய வேண்டும்.

அரசு இதனைச் சரியான முறையில் அணுக வேண்டும். இப்போது இருக்கின்ற அரசு நடுநிலையோடு இருக்கின்றது, சிஸ்டம் சேஞ்சை உருவாக்குகின்றது, மாற்றத்தைப் பற்றி சிந்திக்கின்றது என்றால் இந்த மக்களுடைய காணியை உடன் விடுவிக்க வேண்டும்.

கொழும்பில் கூட பல விகாரைகள் இரவோடிரவாக இடிக்கப்பட்டு இருக்கின்றன. தமிழர் பகுதிகளில் கோயில்கள் சட்டத்துக்கு உட்பட்டு கட்டப்பட்டிருந்தாலும் அழிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டி இங்கே தமிழர்களின் நிலத்தைப் பறித்திருப்பது அபாயகரமானது.

ஆக்கிரமிப்பும் அபகரிப்பும் அழிப்பும் தமிழில் பகுதிகளில் தொடர்ந்தும் நடைபெறுகின்றன. இதனைத் தடுத்து நிறுத்துமாறு நாங்கள் மீண்டும் சர்வதேச சமூகத்திடமும் அரசிடமும் கோரிக்கை விடுக்கின்றோம்.

தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும் விகாரைகள் அமைக்கப்படுவதெல்லாம் தமிழர் நிலங்களைப் பறித்தெடுக்கச் செய்யப்படுகின்ற முயற்சிகள்தான்.

இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒரு முயற்சியினுடைய கட்டம் என்பதைத்தான் இந்த மக்களினுடைய திரட்சி காட்டுகின்றது. எனவே, தீர்வை அரசு வழங்காவிடின் அடுத்துவரும் காலங்களில் போராட்டம் தொடரும்.

அரசு இதற்கு நீதியான – நியாயமான தீர்வு வழங்க முன்வர வேண்டும். தவறினால் இன்னுமொரு முறை விளைவை ஏற்படுத்தும் அல்லது இந்த நாட்டிலே நீதியற்ற சிங்கள அரசினுடைய முகத்தை இன்னும் துலாம்பரமாகக் காட்டும்.

உண்மையில் நீதியான அரசாக இந்த அரசு இருக்கும் என்றால் கட்டாயம் இந்தப் பிரச்சினைக்கு நீதியை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular