முதலில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றில் நான் பார்த்திராத வாகனங்களின் நீண்ட வரிசை இன்று கண்டேன். இதுவே நெடுஞ்சாலை அமைச்சு எதிர்கொள்ளும் சவாலாகும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு புத்தாண்டை ஆரம்பித்து வைத்து இன்று(03) பத்தரமுல்லையில் அமைந்துள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாற்றப்பட வேண்டிய துறைகளை மாற்றி, இந்த அமைச்சை உயர்மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு நாங்கள் உழைத்து வருகிறோம். நீங்களும் நானும் விரைவான வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, நாங்கள் உங்களையும் எங்களையும் பாதுகாக்கும் வகையில் முடிவுகளை எடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
விழா முடிந்ததும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
எதிர்காலத்தில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜனாதிபதி எந்த நேரத்திலும் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ளலாம். அது ஜனாதிபதியின் பணி. எனவே அமைச்சரவை மாற்றம் செய்யப்படுமா இல்லையா என்பதை ஜனாதிபதியிடம் தான் கேட்க வேண்டும். எனக்கு ஜனாதிபதி அதிகாரம் இல்லை என கூறியுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் தேவையா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்… ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவை மாற்றத்தை கொண்டு வருவார். அதனை ஜனாதிபதிதான் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.