இலங்கையின் புதிய பிரதமராக நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை நியமிப்பதற்கான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாதத்தின் முற்பகுதியில், அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், குறைந்தது ஆறு அமைச்சுக்கள் மாற்றியமைக்கப்படும் எனவும் அந்த செய்தியின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இராஜாங்க அமைச்சுக்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படும் எனவும், அவற்றின் கீழ் உள்ள நிறுவனங்கள் மாறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் உட்பட பெரும் எண்ணிக்கையிலான நிர்வாகத் தலைவர்களும் மாற்றப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகும் பி.பீ.ஜயசுந்தர நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசகராக நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் பதவியில் இருந்து விலகும் திட்டம் தமக்கு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திவயின பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் கருத்து வெளியிடும் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி சிலர் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.