தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி வைத்துள்ளார்.
அத்தனகல்ல பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கதிரை சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுண கட்சி வேட்பாளர்கள் சிலர் தமது புகைப்படத்துடன் இணைத்து கையேடுகளை பகிர்வதாகவும் இதற்கு எந்தவொரு அனுமதியையும் தான் வழங்கவில்லையெனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கதிரை சின்னத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் தனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாமென ஏற்கனவே கூறியுள்ளதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு அந்த கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை அவர்களை எனது பெயர் படத்தை பயன்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு இது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.