பாடசாலை மாணவர்களுக்குப் போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, அதனைச் செயல்படுத்துவதற்குக் கொள்கை ரீதியான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய சகல அமைச்சுகள், அரச நிறுவனங்கள் மற்றும் உலக உணவுத் திட்டம் என்பவற்றின் பிரதிநிதிகள் உட்பட தொடர்புள்ள அனைத்துத் தரப்பினர்களுக்கும் இடையில் நேற்று(23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த போசாக்கு மட்டத்தினை கொண்ட மாணவர்களையுடைய மாவட்டங்களில் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்காக செயற்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்துடன், இணைந்ததாகப் பாடசாலை மாணவர்களிடையே இரும்புச்சத்து குறைபாட்டைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சு மற்றும் சுகாதார, வெகுஜன ஊடக அமைச்சு, மாகாண சபைகள், உணவு மேம்பாட்டுச் சபை, உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டு செயலகம் என்பன இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.
இதற்கமைய மதிய உணவு வழங்கும் திட்டத்திற்காக அரசாங்கம் இந்த வருடத்தில் 32 பில்லியின் ரூபாயினை ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட நான்கு மாவட்டங்களில் முன்னோடியாக இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுவதுடன், அதன் பெறுபேறு தொடர்பில் சுகாதார மற்றும் போசாக்குப் பிரிவு முன்னெடுக்கும் முறையான ஆய்வின் பின்னர் அதனை நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது