எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டையைச் சமர்ப்பிப்பதற்கான தெரிவு முன்னதாக வழங்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் பதிவான சில சம்பவங்களைக் கருத்திற்கொண்டு இம்முறை அது தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அலுவலக அடையாள அட்டையை ஆள் அடையாள ஆவணமாகச் சமர்ப்பிக்கின்ற தபால் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டை அடையாளமிட வாய்ப்பளிக்கக்கூடாதெனத் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலர்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சித் மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் கடவுச்சீட்டு, தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஆட்பதிவு திணைக்களத்தால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்தல் கடிதம் ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்று தபால் மூல வாக்களிப்பின்போது ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.