அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் அது தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பரிந்துரைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதியைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, ஜனாதிபதி இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கைக்கு ஏற்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு முன்வைத்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பான விடயங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
அமெரிக்க அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான பரிந்துரைகளைத் தயாரிப்பது மற்றும் ஏற்றுமதி இலக்குகளை பல்வகைப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு முன்வைத்துள்ள முன்மொழிவுகள் என்பவற்றை ஒன்றிணைத்து கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து ஆராயவும் இதன் போது முடிவு செய்யப்பட்டது.