ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற லக்னோ முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக ஹெட் 47 ஓட்டங்களும், அங்கித் வர்மா 36 ஓட்டங்களும் நிதிஷ் ரெட்டி 32 ஓட்டங்களும் குவித்தனர். லக்னோ தரப்பில் அந்த அணியின் ஷர்துல் தாகூர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 191 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க வீரர் மார்க்ரம் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். ஆனாலும், நிகோலஸ் பூரனுடன் ஜோடி சேர்ந்த மிச்சேல் மார்ஷ் 52 ஓட்டங்கள் குவித்தார். அதேவேளை அதிரடியாக ஆடிய நிகோல்ஸ் பூரன் 26 பந்துகளில் 70 ஓட்டங்களை குவித்தார்.
இறுதியில் 16.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 193 ஓட்டங்களை குவித்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அபார வெற்றி பெற்றது. லக்னோ அணியின் டேவிட் மில்லர் 7 பந்துகளில் 13 ஓட்டங்களுடன் அப்துல் சமத் 8 பந்துகளில் 22 ஓட்டங்களுடனும் களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். ஐதராபாத் தரப்பில் அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.