விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டார்.
அதேநேரம் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த பிரேரணையை, பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கு அமைவான உப நிரலில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த பிரேரணை எதிர்வரும் பாராளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
இவ்வாறு கலந்துரையாடப்படும் இந்த பிரேரணை 5 நாட்களுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பாராளுமன்ற விவாதத்திற்குப் பிறகு, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையின் மீது பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்த பிரேரணை 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும்.
பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விசாரிக்க சபாநாயகர் ஒரு விசாரணைக் குழுவை நியமிப்பார்.
விசாரணைக் குழுவின் முடிவு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை குறித்து முடிவு எடுக்கப்படும்.
தேசிய மக்கள் சக்தியின் 115 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை நேற்று (26) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையில் அவருக்கு எதிராக 27 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், 20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில், மார்ச் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.