மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவரான தமிம் இக்பாலின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 ஆம் திகதி டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடிக்கொண்டிருந்தபோது தமிம் இக்பாலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மைதானத்துக்கு விரைந்த மருத்துவக் குழு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
மேலும் விமானம் மூலம் அவரை டாக்காவிலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது.
இதையடுத்து பாசிலதுன்னேசா வைத்தியசாலையில் தமிம் இக்பால் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் தமிம் இக்பால் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன