ஆளும் மக்கள் விடுதலை முன்னணியினர் பல தசாப்தங்களாக சமூகத்தில் வெறுப்பை பரப்பி வருகிறதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டி இருந்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களுடன் நேற்று (25) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;
“.. வெறுப்பை பரப்புவதை விட சேவைகள் நடக்க வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர். வேலையில்லா பட்டதாரிகளுக்கு 35,000 வேலைகள் வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கினர்.
ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவோம் என வாக்குறுதி வழங்கினர். வெறுப்பையும் பகைமையையும் பரப்புவதன் மூலம் நாட்டில் நம்பிக்கையும் ஒற்றுமையுமே சீர்குலையும். எனவே வீராப்பு பேசுவதை நிறுத்திவிட்டு பணியைத் தொடங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
மணிக்கணக்கில் பேசிவிட்டு அந்த இந்த பட்டியல்களை முன்வைப்பதை விட, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதால் சட்ட ரீதியாக அவற்றுக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன். அரசியல் படம் காட்டாமல் சட்டத்தை முறையாக பயன்படுத்துங்கள். அரசாங்கம் என்பது பெரும் பொறிமுறையாகும்.
இந்த பொறிமுறையில் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும். அரசாங்கம் பொறுப்பை விதைக்கவோ அல்லது வேலை செய்ய முடியாமல் போனதற்கான காரணங்களை கூறவோ கூடாது. மக்களுக்கு சேவை செய்யவே ஆணை வழங்கப்பட்டுள்ளது..”