கடந்த 2021ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ பரவலுக்கு காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நைட்ரிக் அமிலம் கசிந்ததன் காரணமாகவே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதாகச் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவலினால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பு மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கு இழப்பீடு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நேற்று(25) மீண்டும் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே மன்றுக்கு இதை அறியப்படுத்தியுள்ளார்.
இதற்கு அந்த கப்பலின் கப்டன் உள்ளிட்ட பணிக்குழாமினர் மற்றும் அதன் உரிமத்தைக் கொண்ட நிறுவனம் ஆகிய தரப்பினரே பொறுப்பு கூற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.