தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இன்றைய தினம் நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரேரணையை ஆளுங் கட்சியின் பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
தேசபந்து தென்னகோன் 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித கொலைக்கான சூழ்ச்சியை மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் சரணடைந்ததன் பின்னர், தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்த ஒருவரை விலக்குவதற்காக 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை நீக்கும் சட்டத்தின் கீழ் 8 காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில் இரண்டு காரணங்களை மேற்கோள் காட்டி, பொலிஸ்மா மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணையை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையளித்துள்ளனர்.
இதேவேளை, ஏலவே 115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு தமது ஆதரவை வழங்குவதாகப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.