சாம்பியன்ஸ் டிராபி தொடர் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ. 798 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்தது. சொந்த மண்ணில் 29 ஆண்டுக்குப் பின் முதல் ஐ.சி.சி., தொடர் என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) ஆடம்பரமாக தயாரானது.
கராச்சி, லாகூர், ராவல்பிண்டி மைதானங்களை தயார்படுத்த, நிர்ணயிக்கப்பட்டதை விட 50 சதவீதம் அதிகமாக ரூ. 503 வரை செலவிட்டது.
போட்டிக்கு தயாராக ரூ. 347 கோடி செலவு (மொத்தம் ரூ. 850 கோடி) செய்தது. ஆனால் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் ஒரு போட்டியில் மட்டும் பங்கேற்றது.
பங்களாதேஷுக்கு எதிரான போட்டி மழையால் முழுமையாக இரத்தாக, லீக் சுற்றுடன் வெளியேறியது. தவிர மழையால் மேலதிக இரு போட்டி இரத்தாகின.
இதனால் போட்டி நடத்தியதற்கு ஐ.சி.சி., தந்த கட்டணம், டிக்கெட், விளம்பரங்கள் வழியாக என மொத்தம் ரூ. 78 கோடி மட்டும் தான் பி.சி.பி.,க்கு கிடைத்தது. சுமார் ரூ. 772 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘தி டெலிகிராப்’ பத்திரிகை வெளியிட்ட செய்தியில்,’ சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, தேசிய ‘டி-20’ சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் சம்பளம் 90 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் ‘பட்ஜெட்’ ஹோட்டலில் தங்க வைக்கப்படுவர்,’ என தெரிவித்துள்ளது.