காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் நடத்த ஆயத்தமான தகவலின் அடிப்படையில் குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.
காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள போதிலும், இஸ்ரேல் தரப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக காசா பகுதிக்குள் உணவு, மருத்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 300 பேர் உயிரிழந்தனர் என்று காசா சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
காசாவின் சுகாதார துறை செய்தி தொடர்பாளர் கலில் டெக்ரான் மத்திய காசாவில் உள்ள அல் அக்சா மருத்துவமனையில் இருந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார்.
போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை முடிவற்றது என்றும், தொடர்ந்து விரிவாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.