படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விவாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அதன் பதில் பணிப்பாளர் ஜயலத் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 10 ஆம் திகதி வியாழக்கிழமை, காலை 9.30 மணி – 10.00 மணி வரை நிலையியற் கட்டளைகள் 22யின் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ளவாறு, பாராளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.
பின்னர் காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை “பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோத தடுப்பு மையங்கள் மற்றும் சித்திரவதை அறைகளை நிறுவிய மற்றும் பராமரித்தல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” மீதான விவாதத்தை நடத்தவும், மே மாதத்தில் மற்றொரு நாளை இரண்டாவது நாளாக விவாதத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
படலந்த ஆணைக்குழு அறிக்கை கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.