2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள் மார்ச் 17 ஆம் திகதி காலை 8 மணி முதல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் ஆரம்பமாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதிகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறும் என்பதால், வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் அனைத்து வேட்பாளர்களும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று (14) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு வேட்பாளரும் இதுபோன்ற இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்குப் பிறகு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் நிறைவடையும் என்றும், வேட்புமனு தாக்கலின் பின்னர் எந்தவொரு அணிவகுப்பு, வாகனப் பேரணி அல்லது ஒன்றுகூடல் நடத்த அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.