கிராம உத்தியோகத்தர்களும் பல்வேறு சமயங்களில் விபத்துக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ள நிலையில் தமக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கோரி இன்று (13) முதல் தொழில் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களினால் இந்த தொழில்சார் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், ஏனைய சங்கங்களின் பிரதிநிதிகளும் இதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திரு.நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர்களில் அறுபது சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் எனவும், பெரும்பாலான கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகங்கள் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசங்களில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் காரணமாக பெண் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புக்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், இன்று (13ம் திகதி) முதல் இரவு நேர அனர்த்தங்கள், உயிரிழப்புகள் உட்பட சகல கடமைகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக தெரிவித்தார்.
நாளை முதல் வாரத்திற்கு ஒருமுறை அலுவலகத்தில் தங்கும் மூன்று நாட்களிலும் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை மட்டுமே (களப்பணிகளுக்கு உட்பட்டு) அலுவலகத்தில் தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே முறைப்படி, காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும், ஆனால், மாலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் இருந்து தங்கள் வீடுகளுக்குச் செல்லும் பெண் அதிகாரிகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்ட அலுவலகங்களில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் திரு.நெவில் விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.