இசைக்கு அப்பால் பரந்துபட்ட மிக முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகர், பாடலாசிரியர் மற்றும் தொழில்முனைவோர் அலோ பிளெக் (Aloe Blacc) மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று(10) காலை இலங்கைக்கு வருகை தந்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் ஆகியோர் அலோ பிளெக்கிற்கு அமோக வரவேற்பளித்தனர்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பிளெக், இலங்கை முதலீட்டிற்கு ஒரு கவர்ச்சிகரமான இடம் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டுவதில் ஒரு பங்காளராக இருக்க விரும்புவதாகவும், இலங்கை அரசாங்கத்துடனும் தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டத்திற்கான ஆரம்ப கட்ட திட்டங்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட இது சிறந்த வாய்ப்பு என்றும் கூறினார்.
தற்பொழுது காணப்படும் மற்றும் புதிய நிறுவனங்கள் ஆகிய இரு பிரிவுகளும் உள்ளடங்கியதாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு முதலீடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் புதிய கருத்துக்களை மேற்பார்வை செய்ய சந்தர்ப்பம் கிடைத்திருப்பது மிகவும் தனித்துவமானது என்று குறிப்பிட்ட அலோ பிளெக், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள பல முதலீட்டாளர்களுடன் தான் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதாகவும், இலங்கையில் காணப்படும் மூலங்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாட தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
அவரின் ‘I Need a Dollar’ (‘ஐ நீட் எ டாலர்’) மற்றும் ‘Wake Me Up’(வேக் மீ அப்’) போன்ற பாடல்கள் உலகளவில் மிகவும் பிரபலமான பாடல்களாகும். அலோ பிளெக்கின் எமது நாட்டுக்கான வருகை உயிரியல் தொழில்நுட்பம், சுகாதார சேவை புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் அவர் கொண்டுள்ள ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.
இலங்கையில் மூன்று நாள் தங்கியிருக்கும் அவர், உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் கலைஞர்களைச் சந்தித்து, கலாசார மற்றும் அறிவியல் துறைகளில் ஒத்துழைப்புகளை மேம்படுத்த உள்ளார்.
இது தவிர அலோ பிளெக் உயிரியல் தொழில்நுட்ப நிபுணர்களுடனும் முதலீட்டாளர் மாநாடுகளிலும் பங்கேற்க இருக்கிறார். மேலும் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் மற்றும் புத்தாக்குநர்களுடன் பல சந்திப்புகளிலும் அவர் பங்கேற்க உள்ளார். சீகிரிய, மின்னேரியா உள்ளிட்ட கலாசார முக்கியத்துவம்வாய்ந்த இடங்களையும் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.
உயிரியல் தொழில்நுட்பத்திற்கு அப்பால், புத்தாக்கம் மீதான அவரின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் பொலிகிராப் மற்றும் ஜிரோப்டிக் போன்ற தொழில்நுட்ப வர்த்தகங்களிலும் அவர் முதலீடு செய்துவருகிறார்.
இந்த வணிக நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, அலோ பிளெக் இசை மற்றும் சமூக சேவை நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். அவரது அண்மைய இசைவெளியீடான Stand Together -2025 ஊடாக , ஒற்றுமை மற்றும் தாங்கும் இயலுமையை ஊக்குவிக்கிறது.
அலோ பிளெக்கின் இலங்கை விஜயம் அவரது இசை நிபுணத்துவத்தை மட்டுமல்ல, புத்தாக்கம், அறிவியல் மற்றும் சமூகப் பொறுப்பு மீதான அவரது ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுகிறது.