follow the truth

follow the truth

March, 10, 2025
Homeலைஃப்ஸ்டைல்இயர்போன் அல்லது ஹெட்போன் - நிரந்தர காது கேளாமை பாதிப்பு ஏற்படலாம்

இயர்போன் அல்லது ஹெட்போன் – நிரந்தர காது கேளாமை பாதிப்பு ஏற்படலாம்

Published on

இயர்போன் அல்லது ஹெட்போன் இல்லாமல் உங்களால் ஒருநாளைக் கூட கடக்க முடியாதா? ‘அப்படியென்றால் உங்களுக்கு நிரந்தர காது கேளாமை பாதிப்பு ஏற்படும்’ என  தமிழ்நாடு அரசின் பொதுசுகாதாரத்துறை கூறுகிறது

பாதுகாப்பற்ற இயர்போன்களின் பயன்பாடு மற்றும் அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை பட்டியலிட்டுள்ளது.

‘இரைச்சல் மூலம் ஏற்படும் செவித்திறன் பாதிப்பை மாத்திரைகள் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது’ என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம், ‘செவித்திறன் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் சில வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டிருந்தார்.

அதில், இயர்போன் மற்றும் ஹெட்போன் பயன்படுத்துவதால் காது கேளாமை எனப்படும் முக்கிய பிரச்சினை ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஒலி சாதனங்களைப் பயன்படுத்தி நீண்டநேரம் மற்றும் அதிக அளவில் இசை மற்றும் பிற ஒலிகளைக் கேட்பதன் மூலம் திரும்பப் பெற முடியாத செவித்திறன் இழப்பு ஏற்படலாம் என சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இயர்போன், ஹெட்போன் மற்றும் இயர்பிளக் ஆகியவற்றைப் பயன்படுத்திய பிறகு தற்காலிகமாக செவித்திறனில் மாற்றம் ஏற்படுவதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.

நீண்ட காலம் பாதுகாப்பற்ற ஒலி சாதனங்களைப் பயன்படுத்துவதால் செவித்திறனில் நிரந்தர மாற்றம் ஏற்பட்டு காது கேளாமை ஏற்படும். சிலருக்கு நிரந்தர காது இரைச்சல் ஏற்படும்’ என்கிறது தமிழ்நாடு அரசின் பொதுசுகாதாரத்துறை.

தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் முக்கியமானவை சில கீழே தரப்பட்டுள்ளன.

* தினமும் வயர் மூலம் இணைக்கப்பட்ட இயர்போன், புளூடூத், ஹெட்போன், இயர்ப்ளக் பயன்பாட்டை 2 மணிநேரத்துக்கு மேல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

* ஒலி சாதனங்களை பயன்படுத்துவதில் இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* சாதாரண அளவில் ஒலி இருந்தாலும் வயர் மூலம் இணைக்கப்பட்ட இயர்போன், புளூடூத், ஹெட்போன், இயர்ப்ளக் ஆகியவற்றின் தேவையற்ற பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இது செவியின் கேட்கும் திறனைக் குறைத்து நிரந்தர காது கேளாமையை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.

* தேவை ஏற்பட்டால் இயர்போன், ஹெட்போன் போன்ற தனிப்பட்ட ஒலி சாதனங்களை 50 டெசிபல் ஒலிக்கு மேல் இல்லாமல் பயன்படுத்த வேண்டும்.

* பொது இடங்களில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்கள், சராசரி ஒலி அளவு 100 டெசிபலுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* குழந்தைகள் இணையத்தில் விளையாடும் (online game) விளையாட்டின் நேரத்தை குறைப்பதன் மூலம் அவர்கள் காது அதிக சத்தத்திற்கு ஆட்படுவதை தவிர்க்க முடியும்.

“தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை தூரமாக அமர்ந்து பாடல்களைக் கேட்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றால் காதில் பாதிப்புகள் வராது” எனக் கூறுகிறார் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை துறையின் இணைப் பேராசிரியர் இளஞ்செழியன்.

டி.ஜே போன்ற இசைக் கச்சேரி நிகழ்வுகள், ஒன்லைன் விளையாட்டுகள் ஆகியவற்றில் அதிக ஒலிகளைக் கேட்கும் போது காதில் அதிக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

“உதாரணமாக, மழைத்துளி ஓரிடத்தில் விழுந்து கொண்டே இருந்தால் அந்த இடத்தில் குழி போன்ற பாதிப்பு ஏற்படுவதைப் போலவே காதுக்குள் தொடர்ந்து அதிக ஒலிகளைக் கேட்கும் போது பாதிப்பு ஏற்படும்” என்கிறார் அவர்.

இதை இரைச்சல் மூலம் ஏற்படும் செவித்திறன் பாதிப்பு (noise induced hearing loss) என்று மருத்துவர்கள் குறிப்பிடுவதாகக் கூறும் இளஞ்செழியன், “இதனை மருந்து, மாத்திரைகள் மூலம் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது. அதாவது பாதிப்பு ஏற்பட்டால் சரிசெய்ய முடியாது” என்கிறார். இதுதொடர்பாக, BMJ Public Health என்ற சர்வதேச மருத்துவ இதழ், கடந்த ஆண்டு விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஒன்லைனில் வீடியோ கேம் விளையாடுகிறவர்களின் செவித்திறனில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. பாதுகாப்பற்ற ஒலி அளவுகள் காரணமாக இவை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான ஒலி அளவுகளைத் தாண்டி நீண்டநேரம் அதிக சத்தத்துடன் விளையாடும் போது காது கேளாமை, காது இரைச்சல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.

சுமார் 50,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இவை தெரியவந்துள்ளதாக பிஎம்ஜே மருத்துவ இதழ் கூறியுள்ளது. “ஒன்லைன் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு அதிக சத்தத்துடன் ஆடுவது தான் உற்சாகத்தைக் கொடுக்கிறது. இதற்காக ஹெட்போன் பயன்படுத்துகின்றனர். இது வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது” எனக் கூறுகிறார் மருத்துவர் இளஞ்செழியன், இதை உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக, ஒலிகளின் அளவு அதிகமாகவும் அதைக் கேட்கும் நேரம் அதிகமாகவும் இருந்தால் செவித்திறன் குறையும் அபாயம் உள்ளதாகக் கூறியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IIFA 25வது விருது வழங்கும் விழா

இந்தியாவின் குஜராத்தில் நடைபெற்ற 25வது IIFA விருதுகளில் கிரண் ராவின் Laapataa Ladies திரைப்படம் அதிக விருதுகளை வென்றுள்ளது. அதன்படி,...

கணினியில் வேலையா? கண்கள் பத்திரம்

தற்போது பெரும்பாலும் கணினி வைத்தே அலுவல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பம் பெருகி, மடிக்கணினி இன்றி பணி செய்வது அரிதாகி...

குழந்தைகள் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் இதோ..

இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் உணவு பட்டியலில் இருக்கவேண்டிய மிக முக்கிய உணவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். நீங்கள் உட்கொள்ளும் உணவில்...