நுகர்வோர் கைவசமிருக்கும் எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற்று, அவற்றுக்கான பணத்தை மீள செலுத்துவது குறித்து நுகர்வோர் விவகார பாதுகாப்பு அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து அதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
எனினும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இதுவரை எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் முறையிட்டு வருகின்றனர்.
புதிதாக விநியோகிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சம் முழுமையாக இன்னும் நீங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எரிவாயு கலவையில் உள்ள குளறுபடியே எரிவாயு வெடிப்புக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதனை சரிசெய்வதற்கு லிட்ரோ எரிவாயு விநியோக நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
எரிவாயு தட்டுப்பாடு உக்கிரமடைந்துள்ளதால், கொழும்பில் ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள், பேக்கரிகள், மூடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.