பரீட்சை வினாக்கள் சில வெளியிடப்பட்ட காரணத்தினால் நெருக்கடிக்கு உள்ளான புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
வினாத்தாள்களை தயாரிப்பதற்கு வளவாளர் தொகுதியொன்றையும் வினாத்தாள் வங்கியொன்றையும் நிறுவுவதற்கான பரிந்துரைகள் கிடைத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (27) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
கடந்த புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வினாத்தாளில் உள்ளடக்கப்பட்டிருந்த மூன்று வினாக்களை ஒத்த மூன்று வினாக்கள், பரீட்சைக்கு முந்திய தினம் குருநாகல் பிரதேசத்தில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரினால் தனது மேலதிக வகுப்பு சமூக ஊடகக் குழுவில் வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிபாரிசு செய்வதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்த மூன்று தீர்வு நடவடிக்கைகளில் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம், சம்பவத்துடன் தொடர்புடைய மனுவின் பதின்மூன்றாவது பிரதிவாதிக்கு, மூன்று மில்லியன் ரூபாவும் ஆறாவது மற்றும் ஒன்பதாவது பிரதிவாதிகள் என குறிப்பிடப்பட்டவர்களால் 2 மில்லியன் ரூபாவும் அரசாங்கக் கட்டணமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ள விடயங்களின் அடிப்படையில், வினாத்தாள் தயாரிப்புக் குழுவின் உறுப்பினர்கள் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசியக் கிளையினூடாக மட்டுமே உரிய வினாக்களைத் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளுதல், அந்தச் செயற்பாடுகள் தொடர்பான இரகசிய ஆவணங்கள் சம்பந்தப்பட்ட கிளையிலிருந்து வெளியே கொண்டுசெல்லப்படாமல் இருப்பதை உறுதி செய்தல், இரகசியக் கிளைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் கடுமையாகப் பரிசோதித்தல், வினா தயாரிப்பு குழக்களுக்கு புதிய உறுப்பினர்களை ஆட்சேரப்புச் செய்தல் மற்றும் பயிற்சியளித்தல் மூலம் ஒரு வளவாளர் தொகுதியையும் வினாத்தாள் வங்கியொன்றையும் நிறுவுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளில் ஒருவரான தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பணிப்பாளரை வினாத்தாள் தயாரிக்கும் குழுவிலிருந்து உடனடியாக நீக்கி, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு விசாரணை முடிவை தெரிவிப்பதற்கும், சம்பளம் இன்றி பணியை விட்டு இடைநிறுத்துவதற்கும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் தெரியவந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஆசிரியரும் அவரது மனைவியும் ஒரே இடத்தில் பணிபுரிவதைத் தடுக்கும் வகையில், அவர்களின் ஒழுக்காற்று அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டு, அந்த ஆசிரியரின் முழு சேவைக் காலத்திற்கும் நடைமுறைக்கு வரும் வகையில் பரீட்சைக் கடமைக்குத் தடை விதிக்கவும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அவரது ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிரிஉல்ல வலய அலுவலகத்தினால் இது குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தி, ஏற்கனவே அவரை பணி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், புலமைப்பரிசில் வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கு நிகரான வினாக்களை தனது வாட்ஸ்அப் குழுவில் வெளியிட்ட குருநாகல் மலியதேவ மாதிரிப் பாடசாலையின் ஆசிரியர் மற்றும் தனியார் வகுப்புகளை நடத்தும் ஒருவருக்கு ஐந்து வருட பரீட்சை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால், பரீட்சைக்கு தோற்றிய எந்த ஒரு பரீட்சார்த்திக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பரீட்சைக்கு முன் கலந்துரையாடப்பட்ட மூன்று கேள்விகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகள் வழங்கி வினாத்தாள்களை மதிப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ததால் பரீட்சை மதிப்பீடு பணி இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும், 2024.12.31 ஆந் திகதி உயர் நீதிமன்ற தீர்ப்பை அறிவித்த பின்னர், வினாத்தாள் மதிப்பீட்டு பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது என்றும் அதற்கான வெட்டுப்புள்ளிகளை மிக விரைவில் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.