வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற பத்தாவது பாராளுமன்றத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம், பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழுவுடன் இணைந்து பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
2023ஆம் ஆண்டுக்கான அளவீட்டு அலகு, நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் செயலாற்று அறிக்கை ஆராயப்பட்டதுடன், செயலாற்று அறிக்கைகளை காலதாமதமின்றி பாராளுமன்றத்திற்கு சமர்க்கப்படுவது அவசியம் என அமைச்சர் வலியுறுத்தியதுடன் குறித்த அறிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மஹாபொல நம்பிக்கை நிதியம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு SLIIT நிதியத்தின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதற்கு அமைய 1100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு மஹாபொல நம்பிக்கை நிதியத்திற்குச் சொந்தமான இடத்திலேயே SLIIT நிறுவனம் கட்டப்பட்டிருப்பதாக கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டதுடன், கடந்த காலத்தில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது குறித்த அறிக்கைகளோ, தகவல்களோ எதுவும் இல்லையென்றும் தெரிவித்தார். எனவே, இது தொடர்பில் மீண்டும் தடயவியல் கணக்காய்வு முன்னெடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.
அரசியல் முடிவுகளின் அடிப்படையில் மஹாபொல நம்பிக்கை நிதியத்திலிருந்து 97 மில்லியன் ரூபா எடுக்கப்பட்டதாகவும், அதில் 37 மில்லியன் ரூபா மீள வழங்கப்படவில்லையென்றும், இந்த விவகாரம் குறித்து விசாரணைகளும் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கும்போது, மஹாபொல நம்பிக்கை நிதியத்திலிருந்து 2650 ரூபா தொகையும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் 2450 ரூபா தொகையும் வழங்கப்படும் என மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் தலைவர் இங்கு தெரிவித்தார்.
அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக வழங்கப்படும் இந்தத் தொகை திறைசேரியிடமிருந்தே கிடைப்பதாகவும், 563 மில்லியன் ரூபா தொகை இன்னமும் கிடைக்கப்பெறவேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மஹாபொல நிதியம் அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு மஹாபொலவை வழங்குவதற்குத் திறைசேரியிடமிருந்து வர வேண்டிய நிதி ஏற்பாடுகளை முறையாகப் பெறுவது அவசியம் என்று மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
வழங்கப்பட வேண்டியுள்ள மஹாபொல புலமைப்பரிசில் தொகையின் நிலுவையை எதிர்வரும் மாதத்திற்குள் வழங்குவதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அத்துடன், ஏப்ரல் மாதத்திலிருந்து மஹாபொல புலமைப்பரிசிலை உரிய முறையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மஹாபொல புலமைப்பரிசில் நிதியை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் ஜனாதிபதி இதை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.