முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பான அறிக்கையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வௌியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இந்தச் செய்தியை ஆராய்ந்தபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்த உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகிலுள்ள மற்றொரு இடத்தில் நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் இன்று நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
ஆனால் அந்த இடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் அல்ல என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் (வணிகம்), சம்பந்தப்பட்ட இடத்தில் ஏற்கனவே தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் அந்த இடத்தில் தங்கியிருந்ததாகவும், அவர்கள் 2024 ஒக்டோபர் மாதம் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளோ அல்லது முன்னாள் ஜனாதிபதியோ அந்த இடத்தில் உள்ள நீர் விநியோகத்திலிருந்து தண்ணீரைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் கூறப்பட்டது.
இதற்கு முன்னர், இந்த இடத்தில் நீர் கட்டணங்கள் ஜனாதிபதி செயலகத்தால் செலுத்தப்பட்டதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட இடத்தில் நீர்க் கட்டண நிலுவைத் தொகையை செலுத்துமாறு எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் பல சந்தர்ப்பங்களில் சபை அதிகாரிகள் அறிவித்துள்ளனர், இன்று, அவர்கள் அவ் இடத்திற்குச் சென்று நிலுவைத் தொகையை செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.
நிலுவைத் தொகையை செலுத்தாததால், சம்பந்தப்பட்ட இடத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது, தற்போது குறித்த நீர் கட்டண நிலுவைத் தொகை ரூ. 429,000 ஆகும் என்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த இடத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் முன்னாள் ஜனாதிபதிக்கோ அல்லது அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.