இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர் ரத்ன கமகேவும் கலந்துகொண்டார்.
அதற்கமைய, இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழகத்துடனும் இந்திய உயர்ஸ்தானிகருடனும் அவசியமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இந்நாட்டு மீனவர்களைப் பாதித்துள்ள இந்தப் பிரச்சினைக்கு முரண்பாட்டு வழியிலல்லாமல் உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்தல் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இங்கு உரையாற்றிய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, எதிர்காலத்தில் சதொச வர்த்தக நிலையங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கமைய, மீன்களை விற்பனை செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக மீன்களை விற்பனை செய்வதற்குத் தேவையா நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.
அதற்கமைய, நுகர்வோர் எளிதாக சமைக்கும் வகையில், மீன் வகைகளை பொதி செய்து வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் காணப்படும் கடற்றொழில் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கௌரவ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.