யாழ். விருந்தகம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (11) இரவு அர்ச்சுனாவுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, அதை எதிர்த்த இரண்டு நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காணொளியாக பதிவுசெய்ய முற்பட்டபோது, அவர்கள் தம்மைத் தாக்கியதாகவும், தற்பாதுகாப்புக்காகத் தாமும் அவர்களில் ஒருவரைத் தாக்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
மேலும் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயப்பட்ட நபரை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.