USAID என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் 2,200 பணியாளர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தற்காலிகமாக தடுத்துள்ளது.
இரண்டு தொழிற்சங்கங்கள் முன்வைத்த மனுவொன்றுக்கு அமைய இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மிகவும் வரையறுக்கப்பட்ட வகையில் இந்த தற்காலிக தடையுத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதி கார்ல் நிக்கோல்ஸ் அறிவித்துள்ளார்.
வோஷிங்டன் டி.சி.யில் உள்ள USAID இனது தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு அதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வரி செலுத்துவோரின் மதிப்புமிக்க பணம் USAID ஊடாக முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.