இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பின் விலையை கருத்தில் கொண்டு உப்பு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலகா தெரிவித்துள்ளார்.
அதன்படி, 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 100 ரூபாவிலிருந்து 120 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.
ஒரு கிலோ கல் உப்பு பக்கட் ஒன்றின் விலை 60 ரூபாவால் அதிகரித்து 120 ரூபாவில் இருந்து 180 ரூபாவாகவும் அதிகரிக்கவுள்ளது.
இதற்கிடையில், உப்பு இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் 28ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 11,880 மெட்ரிக் டன் உப்பு தீவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரச வணிக இதர கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் ஹம்பாந்தோட்டை உப்புத் தொழிற்சாலையில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளதால், எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் உப்பு விநியோகத்தை மேற்கொள்ள முடியுமென நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.