நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும் அரிசியின் கட்டுப்பாட்டு விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் தற்போதைய கட்டுப்பாட்டு விலை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும் அதிகரித்த விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (06) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசுக்கு சொந்தமான நெல் ஆலைகள் தற்போது இராணுவத்தின் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படுகின்றன.
பெரும்போக விவசாயத்தில் அதிகளவான நெல்லை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் காலங்களில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.