கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராக கொண்ட சுயாதீன தனியான பலஸ்தீன் நாட்டை உருவாக்க சவுதி அரேபியா தொடர்ந்தும் முயற்சி செய்யும் என்றும் அந்த நிலைப்பாட்டை மீண்டும் ஒரு முறை உறுதி செய்வதாக சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் திகதி நடந்த ஷூரா கவுன்சில் அமர்விலும் அந்நாட்டு பட்டத்து இளவரசர் இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.
2024 நவம்பர் 11ஆம் திகதி ரியாதில் நடைபெற்ற அரபு-இஸ்லாமிய உச்சி மாநாட்டின் போதும், 1967 எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீன மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், பாலஸ்தீன மண்ணின் மீது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளும் பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், பலஸ்தீன மக்களின் உரிமைகளை பாதுகாக்க உலகளாவிய ஆதரவை திரட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் பொது பேரவையின் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு, பாலஸ்தீனத்திற்கு முழு ஐ.நா. உறுப்பினர் பதவியை வழங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சவூதி அரேபியா பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மீறும் எந்தவொரு நடவடிக்கையையும் முழுமையாக நிராகரிக்கிறது. அதில், இஸ்ரேலிய குடியேற்றக் கொள்கைகள், நிலங்கள் ஆக்கிரமிப்பு, அல்லது பாலஸ்தீன மக்களை அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து அகற்ற முயலும் செயல்கள் அடங்கும். இன்று சர்வதேச சமூகம் பாலஸ்தீன மக்களின் மோசமான மனிதாபிமானச் சூழ்நிலையைத் துடைத்தெடுக்க பொறுப்பு வகிக்க வேண்டும். பாலஸ்தீன மக்கள் தங்கள் நிலத்தில் உறுதியாக நிலைத்திருக்கிறார்கள், அதை அவர்கள் விட்டு செல்ல மாட்டார்கள்.
அத்தோடு சவுதி அரேபியாவின் பலஸ்தீன் தொடர்பான இந்த கொள்கையில் எந்த மாற்றங்களும் வராது என்றும் எந்த சமரசத்துக்கும் இடம் கிடையாது என்றும் பட்டத்து இளவரசர் தெரிவித்துள்ளார்.